Wednesday 19 April 2017

தேசிய பாரதீய ஜனதா: திராவிட தமிழகம் 1

பாரதீய ஜனதா: வியூக விளையாட்டு

பாரதீய ஜனதாவின் வெற்றி என்பது அவர்களின் கள ஆய்வுடன் கூடிய சூழ்நிலைகளுக்கேற்ற அரசியல் அரங்கேற்றம் என்றால் மிகையாகாது. அதன் முதல் விளைவே பாராளுமன்ற தேர்தலில் உத்திரபிரதேசத்தின் 70ல் 66 தொகுதி என்ற யாரும் எதிர்பாராத வெற்றி. அதன் பின், தனி வலிமையுடன் மோடியின் கீழ் மத்திய அரசு, அவரது சகாவான அமித் ஷா வின் கீழ் பாரதீய ஜனதாவும் சென்றுவிட்டது.

பாரதீய ஜனதா வியூகம்

வியூகம் அமைத்து திட்டத்தை நிறைவேற்றுவதில் பாஜக தலைமையின் தந்திரம் சிறப்புக்குரியது. மதவாத கட்சி, காவி கட்சி என்று பலராலும்(காங்கிரஸ்) பல முகம் கொடுத்தாலும், அனைத்து மக்களாலும் வரவேற்கப்படும் கட்சியாக கருதபடுவதற்கு ஏற்ற வெற்றியினையும், தோற்றத்தையும் கொடுக்கும் தரம் கொண்ட வியூகம் தலைமையினால் வகுக்கப்படுகிறது. உயர் ஜாதியின் குறிப்பிட்ட தலைமையின் கீழ் இயங்குவதை விடுத்து, மிகுதி வகுப்பில் தகுதியோரை முன்னிலை படுத்துவதே வியூகத்தின் முக்கியத்துவம்.

தமிழகமும், பாஜகா வும்:

தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் இன்றுவரை வளமான வலிமையுடன் ஆண்டுகொண்டுள்ளது. போதைக்கு ஊறுகாயை பயன்படுத்துவது போன்று தேசிய மற்றும் பிற கட்சிகளை  திராவிட கட்சிகள் பயன்படுத்தி வருகிறது. வேறு வழியின்றி இக்கட்சிகளும் அவர்களின் போதைக்கு ஊறுகாயாக நடனமாடி கொண்டிருக்கின்றன. திராவிட கட்சிகள், தேசிய மற்றும் பிற கட்சிகளின் மீது குறைகளை அள்ளி வீசினாலும் இறுதியில் போதைக்காக ஊறுகாயை பயன்படுத்துவதை தவறவிட்டதில்லை. தமிழகத்தில் தற்போது நடனமாடி கொண்டிருக்கும் அனைத்து தேசிய மற்றும் பிற கட்சிகள், இரு துருவ திராவிட ஆட்சியில் பங்களிப்பினை வழங்கி பங்கினை பெற்ற உத்தமர்களே.

தற்போது திராவிட கட்சிகளின் வலிமை என்பது அதன் தலைமை என்றால் மிகையல்ல. ஆரம்பத்தில் திராவிடம் வேரூன்றியதற்கு காரணம், திராவிட கொள்கையும், அதனை மக்களிடம் சேர்த்த வலிமையான பேச்சாற்றல் உடைய பல தலைவர்களுமே. ஆனால் காலப்போக்கில், கட்சி தலைமையின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற பின் கட்சியின் தடம் மாறியது. குறிப்பாக "மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே" என்ற நிலைக்குட்படுத்தப்பட்டனர். தேசிய கட்சிகள் இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழகத்தின் மீது வியக்கத்தக்க பார்வையாகவே பார்த்துக்கொண்டிருக்கிறது. தேசிய கட்சிகள் மாறி மாறி குதிரை(திராவிட கட்சி) மீது சவாரி செய்தாலும், ஆட்சி ஏக்கம் என்பது எட்டா கனியாக இருந்தது.




காரணங்கள்:

இன்று வரை தமிழகம், தொண்மையை சார்ந்த உணர்வுகளுக்கு(ஜாதி,மொழி,இனம்) முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாகவே உள்ளது.
  • தமிழ் மொழி மற்றும் இனம் மீதான உணர்வு.
  • தமிழ் மொழியும், தேசியம் சார்ந்த கட்சிகளின் நிலைபாடும்.
  • ஈழமும், தேசியம் சார்ந்த கட்சிகளின் நிலைபாடும்.
  • மாநிலம் தழுவிய பிரச்சனைகள்.‌
  • நதி நீர் பங்கீடும், மத்திய அரசின் நிலைபாடும்.
இது போன்ற பெரும் சவால்கள் தேசிய கட்சிகளுக்கு பெரும் தலைவலியாகவே உள்ளது. இது போன்ற பிரச்சினைகளில் தமிழகத்தை தேசிய கட்சிகள் வேற்று நபராக பார்ப்பது ஏற்கதக்கதல்ல என மாநிலத்தின் பெரும்பாலோரின் பிரதிபலிப்பாகவே உள்ளது. அதன் விளைவே இன்று வரை.... ஊறுகாயாகவும், குதிரை(திராவிட கட்சி) மீது சவாரி செய்யும் நிலையாகவும் உள்ளது. இதனை தற்போதைய பாஜக தலைமை உணர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.

பாஜக வின் வியூகம்:
  • ஜாதி மற்றும் மத ரீதியான முக்கியத்துவம்(ஆட்சி மற்றும் கட்சியில்). இதன் மூலம் ஆதரவு கதவினை திறவுதல்.‌
  • பிரபலங்களை நோக்கி அம்பு எய்தி அணியில் இணைத்தல்.
  • தன் அணியில் இணையாதவர்களுக்கு அதிகாரத்தை பயன்படுத்தி சூழ்நிலையை உணர வைத்தல்.
  • பிறகட்சியின் கட்டுமானத்தை சிறு, குறு முதல் பெரிய தலைகள் வரை சிதைத்தல்.
  • ஜாதிய இயக்கம் மற்றும் நடிகர்களின் ஆதரவு பெற்ற குழுவினை ஒருங்கிணைத்து ஆதரவினை பெறுதல்.
தற்போதைய தமிழகம்:




இன்றைய சூழலில் தமிழகத்தில் துருவமற்ற சூழல் நிலவுகிறது. திமுக மற்றும் அதிமுக வின் துருவமும் மறைந்தும் செயலிழந்தும் போனதன் விளைவில் தாமரை மலர துடிக்கிறது ஆனால் தண்ணீர் இல்லை. தண்ணீர் அதிகம் உள்ள அதிமுக பக்கம் தாமரை முதலாளியின் பார்வை திரும்பியுள்ளது. அங்கே தண்ணீரை எடுக்க முயன்று வருகிறது. முடிவுரை எழுதி செயல்முறையை அரங்கேற்றி வருகிறது. தமிழகத்தில் நேரடியா தேசிய கட்சிகளை ஏற்கும் மன நிலையில் மக்கள் இல்லை. எனவே வியூகத்தை விவேகத்துடன் செயல்படுத்தி வருகிறது.
  • முதலில் அதிமுக-விற்கு தரமற்ற, வலிமையற்ற தலைமை மற்றும் அரசினை உருவாக்குதல். அதன் வழியே ஊடுருவி முன்னிலை பெறுதல். 
  • இதன் ஒரு பகுதி தனி பெரும் அதிகாரம் செலுத்த கூடிய சசிகலா குடும்பத்தை கழகத்தை விட்டு விலக்குவது.
சசிகலா அவ்வளவு பெரிய ஆளா? அது ஒரு மாஃபியா அல்லவா?

MGR க்கு பின் ஜெயலலிதாவிற்கு கட்சியும், ஆட்சியும் சசிகலாவின் தொடர்புகள் மூலமாக வழங்கப்பட்டது. அவரது குடும்பத்தால் தான் ஜெயலலிதா வெளி உலகுக்கு பலம் பொருந்திய தலைமையாக திமுக வை எதிர்த்து வழி நடத்தி வந்தார். அனைத்து நிலையிலும் பலம் வாய்ந்தவர்களாக சசிகலா குடும்பம் விளங்கி வருகிறது. அராஜகம் முதல் அதிகாரம் வரை தொடர்பு இன்றளவும் உள்ளது. தற்பொழுது விட்டால் ஜெயலலிதா போன்ற வலிமை வந்துவிடலாம் என்ற பார்வை பிஜேபி தலைமைக்கு உண்டு.

மத்திய பாஜக பார்வையில் சசிகலா வை இரண்டு பார்வையாகதான் பார்க்க முடியும்.

முதலில், இவர்களை வீழ்த்தி வலிமையற்ற தலைமையை உருவாக்கி ஊடுறுவல் அடுத்தது ஜெயலலிதா மரணம். ஜெயலலிதா மரணத்தில் சசிகலா தவறிழைத்திருப்பாரேயானால், அதில் மத்திய அரசின் பங்கும் இருக்கும். ஏனெனில் ஆளுநர் பார்வையின்றி சிகிச்சைக்கு வழியில்லை. எனவே பாஜக வியூகத்தில் வலிமையற்ற தலைமை உருக்குவது தான்.

அதன் ஒரு பகுதியாக கட்சி மற்றும் ஆட்சியை சசிகலாவிடம் இருந்து கைப்பற்ற...




  • சேகர் ரெட்டி கைது.
  • OPS பிரிவு .
  • சொத்து வழக்கு தீர்ப்பு.
  • இரட்டை இலை முடக்கம்.
  • ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து.
  • தினகரன் மீது அமலாக்க துறை வழக்கு.
  • தினகரன் மீது தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் வழங்க முயற்சித்த வழக்கு.
  • சசிகலாவின் நெருங்கியவர்களிடம் வருமான வரி சோதனை.
  • மேலும் நெருக்கமான சில அமைச்சர்கள் பெருமக்கள் வரிமான வரித்துறை பார்வையில்.
போன்ற அடுக்கடுக்கான திசை மாற முடியாத அம்புகளால் இன்று ஒரு முடிவு சித்திகரிக்கப்பட்டுள்ளது.

அதிமுக தொடர்பானது சேகர் ரெட்டி முதல் தாவுத் ஏஜென்ட் வரை நீண்டு இருப்பதை பாஜக அரசு கையில் எடுத்து சாட்டையை சுழற்றி வருகிறது. மேலும் வருமான வரித்துறையின் மூலமும் பல தலைகளின் பிடியை தன்னுள் வைத்து கழகத்தில் கலக்கத்தை ஏற்படுத்தி சசிகலாவிற்கு நேரடி மற்றும் மறைமுக தாக்குதல்களை தொடுத்துள்ளது. தற்போதைய அதிமுக முடிவின் விளைவு விரைவில் மோசமாக வெளிப்படும். அனைவரும் கட்டுப்பாடற்ற கருத்துகளால் நிகழும் விளைவே விபரீதமாகி அது பாஜக வின் சாதனையாக்கப்படும். இரு அணி இணைவால் வலிமையற்ற தலைமையில் அரங்கேறப்போகும் கலவரம் கொடூரமானதாக கூட அமையலாம்.

மொத்தத்தில் இன்றைய அதிமுக வில், தமிழகத்தில் ஓடும் திரைப்படத்திற்கு டெல்லியிலே உள்ள இயக்குனர்கள் தான் கதை வசனம் கொண்டு தீர்மானிக்கப்படுகிறார்கள். வழக்கம்போல் நடிகர்கள்(அரசியல்வாதிகள்) வளமோடும், ரசிகர்கள்(தொண்டர்கள்) மற்றும் பொதுமக்கள் பழியாக்கி பாதிப்பினையும் அடைவர். இதன் தொடர்ச்சியாக திமுக மற்றும் பாமக வினை சிதைக்கும் வேலையும் தொடங்கப்பட்டுவிட்டது.



- தொடரும் -

- கவியரசன் தங்கப்பன்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தஞ்சை மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகள்

திரு.எடப்பாடி மற்றும் திரு.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அரசானது எம. ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டினை வெகுசிறப்பான திட்டங்களுடன் அனைத்து ...